×

பாலிஷ் போட்டு தருவதாக கூறி 15 சவரன் நகைகள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பாலிஷ் போட்டுத் தருவதாகக் கூறி, 15 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்திரமேரூர் அருகே தீட்டாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்பவரது மனைவி ரேவதி (53). நேற்று காலை ரேவதியின் வீட்டின் அருகே மர்ம ஆசாமி ஒருவன், பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போடுவதாக கூறியுள்ளான். இதனை நம்பிய ேரவதி, தனது வீட்டிலிருந்த பித்தளை பூஜை பாத்திரங்களை கொண்டுவந்து ஆசாமியிடம் கொடுத்துள்ளார்.

அந்த பித்தளை பாத்திரங்களுக்கு பாலிஷ் போட்டுக் கொடுத்த மர்ம ஆசாமி, வெள்ளிப் பாத்திரங்களுக்கும் பாலிஷ் போட்டுக் கொடுப்பதாக கூறியுள்ளான். இதனால், ரேவதி தனது காலில் இருந்து வெள்ளிக் கொலுசை கழற்றி கொடுத்து பாலிஷ் செய்துகொண்டார். பின்னர் தங்க நகைகளுக்கும் பாலிஷ் போட்டுக் கொடுப்பேன், ஏதேனும் தங்க நகை இருந்தால் எடுத்து வாங்கள் என ஆசாமி கூறியுள்ளான்.இதனை நம்பிய ரேவதி, தனது மாமியார் ஜானகியின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் செயின் மற்றும் தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயின், கையில் இருந்த 5 சவரன் கொண்ட 4 வளையல்கள் என மொத்தம் 15 சவரன் தங்க நகைகளை ஆசாமியிட கொடுத்துள்ளார்.

அந்த நகைகளுக்கு பாலிஷ் போட்ட மர்ம ஆசாமி, நகைகளை துடைத்து கொடுக்கிறேன் என்றபடி, போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த மற்றொரு மர்ம நபர் பைக்கிள் வந்தவுடன், பாலிஷ் போட்டு நகைகளை துடைத்துக் கொண்டிருந்த மர்ம ஆசாமி அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த ேரவதி, இதுகுறித்து உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலிஷ் போடுவதாகக் கூறி, நகைகளை பறித்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post பாலிஷ் போட்டு தருவதாக கூறி 15 சவரன் நகைகள் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Uttara Merur ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்